New year offer 2017

இலங்கை செய்திகள்

2020 பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக பொலிஸார் தகவல்

08/05/2020

2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் பல பகுதிகளில் பதிவான சில சிறிய தேர்தல் வன்முறைச் சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாக்களிப்பு காலப்பகுதியில் தேர்தல் முறைக்கேடுகள் தொடர்பில் 29 முறைப்பாடுகளே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதன்போது 34 ஆதராவாளர்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

தேர்தலுக்கான வாக்களிப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறிய வன்முறைச் சம்பவங்கள் குச்சவெளி, போகஹகும்புர, நிட்டம்புவ மற்றும் வெலம்பொட ஆகிய பகுதிகளில் வேட்பாளர்கள் படங்கள், கட்சி சின்னங்கள் மற்றும் விருப்ப எண்களை சில குழுக்கள் காண்பித்ததாக குற்றஞ்ட்டப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்கட்டினார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. இந்த சிறிய சம்பவங்களை தவிர வேறு ஏதும் பாரிய அளவிலான சம்பவங்கள் பதிவாகவில்லை.

அதேநேரம் நாவலப்பிட்டி மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளிலும் வாக்களார்கள் இருவர் வாக்குச் சீட்டுக்களை  புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இருவரையும் கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களை அந்தந்த நீதிவான் நீதமன்றில் ஆஜர்படுத்தபடுத்தியும் உள்ளனர். இதன்போது பிலியந்தலையில் கைதுசெய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாவலப்பிட்டியில் கைதுசெய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்றிரவு வாக்கெண்ணும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு சேர்க்கப்படும், அதேநேரத்தில் அனைத்து மையங்களினதும் பாதுகாப்பும் பாதுகாக்கப்படும்.

மேலதிக பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் வாக்கெண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், 66 வாக்கெண்ணும் மையங்களிலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் கூறினார்.