New year offer 2017

இலங்கை செய்திகள்

போராட்டக்காரர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

09/26/2022

போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் போராட்டக்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை.

போராட்டங்களை நடத்த பொலிஸாரின் அனுமதி
எனினும் போராட்டம் நடத்தப்படுவதற்கு ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னதாக உள்ளூர் பொலிஸாரிடம் போராட்டத்திற்கான அனுமதியை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டிற்குள் குழப்பமான நிலைமையை உருவாக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையேற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் எதிர்ப்புகளை சட்ட ரீதியாக தடுக்க பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இனிவரும் காலங்களிலும் நடவடிக்கை எடுப்பார்கள். ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புகளை வெளியிட மக்களுக்கு இருக்கும் உரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அதேபோல் அந்த உரிமைகளை நாங்கள் மதிக்கின்றோம். எனினும் எந்த ஆர்ப்பாட்டமோ, பேரணியோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளோ, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், பொருளாதாரத்திற்கும் தடையாக இருக்கக்கூடாது.

நாட்டின் சட்டத்திற்கு அமைய ஆர்ப்பாட்டங்கள் அல்லது எதிர்ப்பு நடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக பாதுகாப்பு தரப்பினரிடம் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இந்த சட்டத்தை மதித்து நடத்தப்படுபவை அல்ல.

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து அனுமதியை பெற்றுக்கொண்டால் எந்த சிக்கலும் பிரச்சினையும் இருக்காது என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.

எந்த நிலைமையாக இருந்தாலும் நாட்டின் பொது அமைதிக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறி, மக்களுக்கு தடையேற்படும் வகையில் பொறுப்பின்றி நடந்துக்கொள்ள எந்த தரப்புக்கும் இடமளிக்க முடியாது. இது சம்பந்தமாக அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் செயற்படும்.

இவ்வாறு செயற்படவில்லை என்றால், இதற்கு முன்னர் நாட்டில் அனுபவித்த அராஜகமான பயமுறுத்தும் சூழ்நிலை நாட்டில் உருவாகும். அரச மற்றும் தனியார் சொத்துக்களை அழிக்கும், உயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத சம்பவங்கள் மீண்டும் ஏற்படும்.

இப்படியான நிலைமை நாட்டில் மீண்டும் ஏற்பட எம்மால் இடமளிக்க முடியாது. சில அணிகள் தமது நோக்கங்களை அநீதியாக நிறைவேற்றிக்கொள்ள எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தடுக்க சட்டத்திற்கு அமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டக்காரர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு | No Issue With Peaceful Protests Sri Lanka

 

மக்கள், பொறுப்புக் கூறும் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே ஜனாதிபதி அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தியுள்ளார். அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் எவரும் வழமை போல் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். சட்டத்திற்கு விரோதமாக செயற்படும் நபர்களுக்கு மட்டுமே பிரச்சினை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பதில் அமைச்சர்கள் நியமனம்
இந்த நிலையில் அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.